‘தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெங்கு காய்ச்சலை ‘மர்ம காய்ச்சல்’ என்று மறைத்தவர்கள், இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்க வருகிறார்கள்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்து அறிக்கை என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி இறைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் பழனிசாமி. டெங்கு காய்ச்சல் விவரங்கள் அனைத்தும் இந்த அரசே அதிகாரப்பூர்வமாக நாள்தோறும் வெளியிட்டு வரும் தகவல்கள்தான்.
மறைக்காமல் வெளியிடுவதால்தான் அவரால் அவற்றை மேற்கோள் காட்டவே முடிகிறது. ஆனால், இதே பழனிசாமி ஆட்சியில் டெங்கு பாதிப்பை மறைத்து, மர்ம காய்ச்சல் என்று பெயர் சூட்டி மக்களின் உயிரோடு விளையாடினார்.
அதனால்தான் அவரது அப்போதைய அரசு டெங்கு அரசு என்று மக்களால் அழைக்கப்பட்டது. நோயைக் கண்டறிவது குற்றமல்ல. மறைப்பதுதான் குற்றம்.
பழனிசாமி தன் அறிக்கையில் ‘செய்ய வேண்டும்’ என்று பட்டியலிட்டுள்ள ஒவ்வொரு பணிகளும் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கப்பட்டு தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
