கேரள மாநிலம், கொச்சி மாவட்டம் சேரானல்லூரில் கடந்த 24-ம் தேதி அதிகாலையில் ஸ்கூட்டரில் சென்றவர் மீது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற ஜெயபாலகிருஷ்ணன் (55) என்பவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் எர்ணாகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீதும் விபத்து நிகழந்தபோது காரை ஓட்டிய அவருடைய 17 வயது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல் துறையினர் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன், பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.
குறிப்பாக, சிறுவனின் செல்வாக்கு மிக்க தந்தை, வழக்கை வலுவிழக்கச் செய்ய முயற்சிப்பதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இந்த வழக்கு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், கொச்சி காவல் ஆணையர் காளிராஜ் மகேஷ் அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆர். நிஷாந்தினி நியமிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 4 காவலர்கள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
