Home மாநில செய்திகள் மேகேதாட்டு விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்

மேகேதாட்டு விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்

0

 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றம், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும்.

ஆதலால், கர்நாடக அரசு மேகேதாட்டுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தையோ, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது” என்று முதல்வர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இதுவரை காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக, பாமக, கொமதேக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முதல்வரின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியுள்ளனர்.

முதல்வர் விஜய் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது முதல் நபராக உரையாற்றிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.

அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில், “முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காவிரி என்பது ஒரு நதி மட்டுமல்ல, தமிழ்நாடு விவசாயிகளின் உயிர்நாடி. அதனை நம்பியே லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை உள்ளது.

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி நடுவே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

காவிரி நீர் வழங்குவது குறித்து நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை மூன்று வழித்தடங்களில் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்து மேக்கேதாட்டு அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

தமிழகத்தின் பல பகுதிகளும் பாதிக்கும். கர்நாடக அரசின் ஒருதலைபட்மான நடவடிக்கையை காங்கிரஸ் கண்டிக்கிறது” எனத் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version