Home விளையாட்டு செய்திகள் லண்டன் கார் பந்தயம்: அஜித்குமார் அணிக்கு 38-வது இடம்

லண்டன் கார் பந்தயம்: அஜித்குமார் அணிக்கு 38-வது இடம்

0

லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அணிக்கு 38-வது இடம் கிடைத்துள்ளது.

முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். நடிகர் அஜித்தின் அழைப்பின் பேரில் முதல்வர் விஜய் அங்கு சென்றார். கார் பந்தயம் நடைபெறும் களத்துக்கு சென்ற முதல்வர் விஜய் அங்கு அஜித் குமாரை ஓடிச் சென்று ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் அஜித் தலைமையிலான ரெட் ஆன்ட் பை விராஜ் அணி என்ற பெயரில் பங்கேற்றது. இதைத் தொடர்ந்து இந்தக் கார் பந்தயம் நடைபெற்றது. இந்த 2026-ம் ஆண்டுக்கான மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தய தொடரில் மொத்தம் ஆறு சுற்றுகள் இடம்பெறுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள பந்தய களத்தில் முதல் சுற்று நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டில் 2-வது, 3-வது சுற்றுகளும், பெல்ஜியத்தில் 4-வது சுற்றும், இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோனில் 5-வது சுற்றும் நடந்தன. கடைசி மற்றும் ஆறாவது சுற்று பந்தயம் போர்ச்சுகல் நாட்டில் வரும் அக்டோபர் 10-ம் தேதி நடைபெற இருக்கிறது.

மேலும், இந்த பந்தயத் தொடரானது 3 வகை கார்களை கொண்டதாக நடத்தப்படுகிறது. நடப்பு 2026-ம் ஆண்டுக்கான சீசனில் எல்எம்பி3, எல்எம்பி3 புரோ/ஆம், ஜிடி3 என 3 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி முடிவுகளும், பதக்க மேடையில் வீரர்களுக்கு கவுரவமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் ஐந்தாவது சுற்று சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்றது.

எல்எம்பி3 புரோ/ஆம் பிரிவு போட்டியில் அஜித் குமார் மற்றும் பிரெஞ்சு ஓட்டுநர் ரோமைன் வோஸ்னியாக் இணைந்து பங்கேற்றனர்.

அஜித்குமார் அணி 48 சுற்றுகளை 2 மணி நேரம் 3 நிமிடம் 44.552 விநாடிகளில் நிறைவு செய்தது. அதிகாரப்பூர்வ முடிவின்படி, அனைத்து வகை கார்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பிரிவில் அஜித்குமார் தலைமையிலான ரெட் ஆன்ட் பை விராஜ் அணி 38-வது இடத்தைப் பிடித்தது. மொத்தம் 44 கார்கள் பந்தயத்தில் பங்கேற்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version