Home சினிமா செய்திகள் ‘கெணத்த காணோம்’ பட அறிமுக விழா – மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா குறித்து யோகி...

‘கெணத்த காணோம்’ பட அறிமுக விழா – மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா குறித்து யோகி பாபு நெகிழ்ச்சி

0

இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் என்று ‘கெணத்த காணோம்’ நிகழ்ச்சியில் யோகி பாபு பேசினார்.

ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெணத்த காணோம்’. இப்படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இதன் இறுதிகட்டப் பணிகளின் போது உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். அவருடன் பணிபுரிந்தவர்கள் இறுதிகட்டப் பணிகளை முடித்து, இப்போது ‘கெணத்த காணோம்’ வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக தியாகராஜன், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், தமிழ், வசந்தபாலன், கரு பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவில் யோகி பாபு பேசும் போது, “’கெணத்த காணோம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி.

சங்கையாவை எனக்கு ’காக்கா முட்டை’ படத்தில் இருந்தே தெரியும். ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை.

அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன்.

நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன்” என்று பேசினார் யோகி பாபு. இந்த நிகழ்ச்சியில் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் குழந்தை படிப்பு செலவுக்கு மேடையிலேயே காசோலை வழங்கினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version