முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் வரும் 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி தொடங்கி, மெரினா கடற்கரை வரை நடைபெறுகிறது.
மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.
பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
எனவே, சென்னையின் திமுக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
