தோஹாவில் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்தத் தோல்விக்குப் பிரதான காரணம் திலக் வர்மாவின் படுமந்தமான சதம் தான். தோல்வியில் முடியும் சதத்தினால் எந்த விதப் பயனும் இல்லை.
அவர் முதல் 33 பந்துகளில் 7 ரன்களையே எடுத்தார் பிறகு 149 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்தார். இத்தகைய சொதப்பலான மந்தமான இன்னிங்ஸினால் பாகிஸ்தான் ஏ அணியின் 312 ரன்கள் ஸ்கோரை எட்ட முடியாமல் 48 ரன்கள் வித்தியசத்தில் தோல்வி கண்டது.
அதாவது 149 பந்துகளில் இந்தக் காலத்தில் டெஸ்ட் போட்டிகளிலே கூட 100 ரன்கள் எடுப்பது மந்தமான இன்னிங்ஸ் ஆகப் பார்க்கப்படும் போது, இவர் ஒருநாள் போட்டியில் அதுவும் 312 ரன்கள் இலக்கை எதிர்த்து இப்படி ஆடியிருக்கிறார்.
இதில் சில ஊடகங்களின் தலைப்புகள்தான் நகைப்புக்குரியதாக உள்ளது. ‘திலக் வர்மாவின் சதம் வீண்! இந்தியா தோல்வி” என்று ஆங்கில ஊடகங்களில் எழுதுகிறார்கள். ‘திலக் வர்மாவின் மந்தமான சதத்தினால் இந்தியா ஏ அணி வீண் தோல்வி’ என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்.
இவரைப்போலவே இடது கை வீரர்தான் அபிஷேக் சர்மா. அவர் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிச்கர்களுடன் 70 ரன்கள் எடுத்து எப்படி 312 ரன்கள் இலக்கை விரட்ட வேண்டும் என்று அடித்தளம் அமைத்துக் கொடுத்து விட்டு போயிருக்கிறார். திலக் வர்மா இறங்கி அறு அறு என்று அறுத்துத் தள்ளி விட்டார், இத்தனைக்கும் பெரிய பவுலிங்கெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் 312 ரன்களை அடிக்க முடிந்திருக்கும் போது திலக் வர்மாவின் இந்த இன்னிங்சை மன்னிக்க இடமேயில்லை.
36 பந்துகளில் 8 ரன்கள் என்று போட்டு படு அறுவையாகத் தொடங்கி அறுவையாகவே இன்னிங்ஸ் முழுதும் ஆடி இலக்கை நோக்கிய ரன் ரேட்டை ஓவருக்கு 9.1 ரன்கள் என்று ஏற்றி விட்டார். இதனால் அபிஷேக் சர்மா முதல் ரிங்கு சிங், குமார் குஷாக்ரா சூர்யான்ஷ் ஷெட்கே என்று அனைவருமே ரன் ரேட் அழுத்தம் காரணமாக ஆட்டமிழந்தனர். ஆகவே திலக் வர்மாவுக்கு ஸ்டாண்ட் கொடுக்க ஆளில்லை என்பது தவறான பார்வை.
திலக் வர்மா ‘ஸ்டாண்ட்’ ஆனதால்தான் மற்றவர்கள் பிரஷரில் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமதுவுடனான சதக் கூட்டணியில் ஷாபாஸ் அகமதுதான் அதிக ரன்களை எடுத்தார். திலக் வர்மா பிளேடு போட்டுக் கொண்டிருந்தார். நகைச்சுவையாகக் கூற வேண்டுமெனில், இதோ ஒரு கற்பனை உரையாடல்:
திலக் வர்மா: “நான் ஒரு ‘எண்ட்’ கடைசி வரை நிற்கிறேன் யாரும் சப்போர்ட் கொடுக்கவில்லை’
மற்ற வீரர்களின் மைண்ட் வாய்ஸ்: நீங்க ஒரு எண்ட் நின்னதாலதான் பிரச்சனையே.”
கடைசி 10 ஓவர்களில் 91 ரன்கள் தேவை என்ற நிலையில் 112 பந்துகளில் 69 ரன்களையே எடுத்திருந்த திலக் வர்மா அதன் பிறகு 37 பந்துகளில் வெறும் 31 ரன்களையே எடுத்துள்ளார். இதில் பின் வரிசை வீரர்கள் ஸ்டாண்ட் கொடுக்காத விவகாரம் எங்கிருந்து வருகிறது?!
149 பந்துகளில் சதம் எடுத்து கடைசியாக ஆட்டமிழந்திருக்கிறார், ஆகவே போராடினார், போனார் வந்தார் என்றெல்லாம் திலக் வர்மாவுக்குப் பில்ட் அப் கொடுப்பதும் முட்டுக் கொடுப்பதும் இந்திய கிரிக்கெட்டுக்குச் செய்யும் மாபெரும் தவறிழைப்பாகும்.
திலக் வர்மா கடைசி வரை நின்று கொண்டு இலக்கு பற்றிய எந்த உணர்வுமே இல்லாமல் ஆடிவிட்டு அவருக்கு ஸ்டாண்ட் கொடுக்கவில்லை என்றெல்லாம் யோசிக்க முடியாது. ஒருவேளை கம்பீரின் செல்லப்பிள்ளையாக இவர் இருப்பதால் கம்பீருக்கு வேண்டுமானால் இந்த இன்னிங்ஸ் ‘நல்ல’ இன்னிங்ஸ் ஆக இருக்கலாம். மற்றபடி திலக் வர்மாவினால்தான் இந்தத் தோல்வி என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
முன்பெல்லாம் இப்படி சில வீரர்கள் இந்திய அணியில் ஆடுவார்கள், அதில் குறிப்பாக அஜய் ஜடேஜாவின் நினைவுதான் வருகிறது. இவர் 1999 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்தார். ஆனால் என்ன பயன்? ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை எட்ட அது போதுமானதாக இல்லை என்பதோடு, ஒரு கட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நிலையையே ஏற்படுத்தாத முற்றிலும் சுயநலமான இன்னிங்ஸ் ஆக அது முடிந்தது.
அப்போது ஜெஃப்ரி பாய்காட் கூறினார், “எப்போது 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் காலியானதோ அப்போதே இந்தியா தோல்வி அடைந்து விட்டது. அதன் பிறகே அஜய் ஜடேஜாவின் சதம் ஒரு பிறழ்வு சதம்தான்” என்றார். 282 ரன்கள் இலக்கை எதிர்த்து இந்தியா அன்று 205 ரன்களையே எடுக்க முடிந்தது.
அப்போது ராபின் சிங் 95 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார், அதுவும் போதாமையே. நேற்று ஷாபாஸ் அகமது உண்மையில் 49 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்தார். அன்றைய அஜய் ஜடேஜாவை விடவும் மந்தமாக ஆடிய திலக் வர்மா நேற்று 149 பந்துகளில் சதம் எடுத்து வெற்றி வாய்ப்பை வீணடித்தார். 100 பந்துகளில் சதம் எடுத்திருந்தால் 48 ரன்களில் தோல்வி அடைந்திருக்க மாட்டோம். நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். ஆகவே இந்தத் தோல்விக்கு கேப்டனாக திலக் வர்மாவே பொறுப்பேற்க வேண்டும், அவரையே பொறுப்பாக்க வேண்டும்.
