சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக வேட்பாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் சென்னை போலீஸார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும், தவெக சார்பில் சினோரா அசோக்கும் போட்டியிட்டனர்.
இதில் சேகர்பாபு வெற்றி பெற்றார். முன்னதாக, வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்.23-ம் தேதி, மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது.
அப்போது, சேகர்பாபு தன்னைத் தாக்கியதாக சினோரா அசோக் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல, சேகர்பாபு தரப்பில் இருந்தும் எதிர்தரப்பினர் மீது புகார் அளிக்கப்பட்டது.
சினோரா அசோக் அளித்த புகாரின் அடிப்படையில், சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் விளைவித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகர்பாபுவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் சேகர்பாபு நேற்று காலை 11 மணி அளவில் விசாரணைக்காக ஆஜரானார்.
சினோரா அசோக் தாக்கப்பட்டது குறித்து அவரிடம் போலீஸார் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மதியம் 3 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, சேகர்பாபு புறப்பட்டுச் சென்றார்.
