மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) 80 எம்எல்ஏக்களில் 58, மக்களவையின் 29 எம்.பி.க்களில் 20 பேர் மற்றும் மாநிலங்களவையின் 13 எம்.பி.க்களில் 4 பேர் மம்தாவுக்கு எதிராகக் கிளம்பி உள்ளனர்.
இதை சமாளிக்க காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஐக்கியமாவது குறித்து மம்தா யோசனை செய்து வருகிறார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பங்கேற்றார்.
இதற்கு முன்பு நடைபெற்ற இண்டியா கூட்டணி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத மம்தா, இந்த முறை பங்கேற்றது சுயலாபத்துக்காகத்தான் என்ற விமர்சனம் எழுந்தது.
எனினும், டெல்லியிலேயே தங்கி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் கார்கே ஆகியோரை மம்தா சந்தித்து பேசினார். மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொண்டார்.
இதேபோல், காங்கிரஸில் இருந்து வெளியேறி தேசியவாதக் காங்கிரஸ் கட்சி தொடங்கிய சரத்பவார், மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. அதற்காக, தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த திமுகவையும் இண்டியா கூட்டணியில் மீண்டும் இழுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
