உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது. அதேவேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 6.30 மணிக்கு நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்தை குறைந்தபட்சம் டிரா செய்தால் மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
அதேவேளையில் தனது முதல் ஆட்டத்தை வேல்ஸ் அணிக்கு எதிராக 3-3 என டிரா செய்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் வீழ்ந்திருந்தது.
இதனால் ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி 2-வது சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி எப்போதுமே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற புரோ லீக் தொடரின் ஐரோப்பியச் சுற்றில் பாகிஸ்தானை 7-1 மற்றும் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியிருந்தது. பாகிஸ்தான் அணி கடைசியாக இந்தியாவுக்கு எதிராக 2016-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் வெற்றி பெற்றிருந்தது.
கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்றுள்ளது. அதேவேளையில், நான்கு முறை உலகக்கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் அணி கடந்த 2014 மற்றும் 2023-ம் ஆகிய தொடர்களுக்கு தகுதி பெறாத நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் உலகக் கோப்பையில் விளையாடி வருகிறது.
கடைசியாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை தொடரில் கடந்த 2010-ல் நேருக்குநேர் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டிருந்தது. 2018-ம் ஆண்டு தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவில்லை.
