Home மாநில செய்திகள் மதுரை, கோவை, சேலம், நெல்லை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை...

மதுரை, கோவை, சேலம், நெல்லை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

0

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.2) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (நவ.3) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 25 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரள கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 11 செ.மீ. மழை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தென்மாநில பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இணையவழியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருத்யுன்ஜெய் மொகபத்ரா கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளில் நவம்பர் மாதம் வழக்கத்தைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நவம்பர் முதல் வாரத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு மழை குறைந்தாலும், இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். அப்போது, வடதமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நவ.7 முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழைபெய்யக் கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version