Home சினிமா செய்திகள் DC: விமர்சனம் – வியக்க வைத்ததா லோகேஷ், அருண், அனிருத் ‘விருந்து’?

DC: விமர்சனம் – வியக்க வைத்ததா லோகேஷ், அருண், அனிருத் ‘விருந்து’?

0

தனது அறிமுகப் படமான ‘ராக்கி’ மூலம் தமிழ் சினிமாவில் ரத்தமும் வன்முறையும் நிறைந்த திரை மொழியை வெளிப்படுத்தியவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

அசர வைக்கும் கேமரா ஆங்கிள்கள், வியக்க வைக்கும் ஃப்ரேம்கள் ஆகியவை இருந்தாலும் ஏனோ அவரது அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பேசப்படவில்லை. தற்போது இயக்குநரிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது முந்தைய படங்களில் விட்டதை அருண் மாதேஸ்வரன் இதில் பிடித்தாரா என்று பார்க்கலாம்.

காவல் துறைக்குச் சொந்தமான ஆயுதங்களை திருடுவதுடன், ஒரு காவல் துறை அதிகாரியை கொலையும் செய்கிறார் தாஸ் (லோகேஷ் கனகராஜ்). காவல் ஆய்வாளர் போஜராஜ் (கிரிஷ் தயாள்) மற்றும் அவரது குழுவினரிடமிருந்து தப்பிக்க தாஸும் அவருடைய கூட்டாளிகளும் சென்னையில் உள்ள ஒரு விடுதியில் பதுங்குகிறார்கள்.

அங்கே பார்வதியை (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) தாஸ் சந்திக்கிறார். குறுகிய காலமே நீடிக்கும் அந்த ஈர்ப்பு எதிர்பாராத விதமாக முடிகிறது. இதற்கிடையில் பாலியல் தொழிலாளியான சந்திராவின் (வாமிகா) கதையும் நமக்கு அறிமுகமாகிறது. 

சரத் சந்திர சட்டோபாத்யாய எழுதிய புகழ்பெற்ற ‘தேவதாஸ்’ கதையை தன்னுடைய பாணியில் மாற்றி இருக்கிறார் அருண் மாதேஸ்வரன். தேவதாஸ், பார்வதியை காதலிப்பதற்கு முன்பே அவளை இழந்துவிட்டால் என்ன ஆகும்? தேவதாஸ் ஒரு காதலனாக இல்லாமல் குற்றப் பின்னணி கொண்ட நபராக இருந்தால் எப்படி இருக்கும்?

தேவதாஸ் வாழ்க்கையில் பார்வதி இல்லாமல், நீண்ட காலமாக தன் வாழ்வுக்கான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் இன்னொரு பெண் அவர் வாழ்க்கைக்குள் வந்தால் என்ன ஆகும்? அந்த தேவதாஸ் ஒரு ராபின்ஹுட் போன்ற மனிதனாக மாறினால் என்ன ஆகும்? – இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடியே ‘டிசி’ நகர்கிறது.

தனது முதல் படமான ‘ராக்கி’யில், வன்முறையை வெறுமனே அதிர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல், அதற்குள் இருக்கும் மனித உணர்வுகளையும், இருண்ட வாழ்க்கைக்குள் இருக்கும் கவித்துவத்தையும் அழுத்தமாகக் காட்டியிருந்தார் அருண் மாதேஸ்வரன்.

ஆனால் ‘ராக்கி’க்குப் பிறகு வந்த படங்களில் அந்த இயல்பான தன்மை படிப்படியாகக் குறைந்து, வன்முறையை நோக்கியே கதை நகர்வது அதிகரித்தது. அப்படங்களில் வெறுமனே அழகான ஃப்ரேம்களையும், சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப அம்சங்களையும் நம்பி திரைக்கதையில் கோட்டை விடப்பட்டிருந்த நிலையில், இப்படத்தில் அதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். 

‘டிசி’ என்ற தலைப்பு படத்தின் இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களான தேவதாஸ் மற்றும் சந்திரா ஆகியோரின் பெயர்களை குறிக்கிறது. அதற்கு ஏற்றபடி இந்த இரண்டு கதாபாத்திரங்களும்தான் படத்தின் உயிர்நாடியாகவும் இருக்கிறது.

கதையின் நாயகன் தாஸின் உலகம் வன்முறை நிறைந்தது. தேவதாஸ் ஒரு முரட்டுத்தனமான மனிதன். அவர் ஏன் இப்படிப்பட்டவராக மாறினார் என்பதற்கான காரணங்களை இயக்குநர் ஒரே நேரத்தில் சொல்லாமல், கதை நகர நகர கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்திய விதம் சிறப்பு.

மற்றொருபுறம், சந்திரா தனது விருப்பம் இல்லாமல் வன்முறை உலகுக்குள் சிறுவயதிலேயே தள்ளப்பட்டவர். எதிரிகளை கொல்லவும் துணிந்த கோபக்கார பெண்ணாக இருந்தாலும், வாழ்நாள் முழுதும் சிறைவைக்கப்பட்ட ஒரு சிறுமியாகவே அவர் நமக்கு காட்சிளிக்கிறார். இந்த இருவருடைய வாழ்க்கைப் பாதைகளும் ஒரு கட்டத்தில் சந்திக்கும்போது கதை சூடுபிடிக்கிறது.

சமூகத்தால் கைவிடப்பட்டு, அடிபட்டு, பெற்றோரின் அரவணைப்பை இழந்த கதாபாத்திரங்கள் என அருண் மாதேஸ்வரணின் கதைகளில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அந்த வகையில் ‘டிசி’யும் இயக்குநரின் முந்தைய படங்களின் அதே பாதையில்தான் பயணிக்கிறது. ஆனால் இதில் அவர் கையாண்டிருக்கும் விதம்தான் இந்தப் படத்தை வேறுபடுத்துகிறது. 

அவரது முந்தைய படங்களில் இல்லாத ஒரு நுட்பமும் அழகான அணுகுமுறையும் இந்தப் படத்தில் இருக்கிறது. ‘டிசி’ வெறும் கேமரா ஆங்கிள்களையும் ரத்தம் தெறிக்கும் சண்டைகளையும் மட்டுமே நம்பியிருக்கவில்லை. தாஸுக்கு விரிவான பின்னணிக் கதையை உள்ளது. அதேபோல் பார்வதி மற்றும் சந்திராவின் வாழ்க்கைக்கும் அழுத்தமான பின்னணி இருக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் அதன் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்ட சண்டைக் காட்சிகளும், அனிருத்தின் அட்டகாசமான இசையும்தான். ரத்தம், தோட்டாக்கள் என வன்முறை சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அந்த வன்முறை வெறுமனே கைதட்டலுக்காக திணிக்கப்பட்டதாக இல்லாமல் கதையின் ஒரு பகுதியாக இயல்பாக பொருந்துகிறது. 

படத்தின் ஹீரோ அனிருத் என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. காரணம், சமீப காலத்தில் அனிருத் கொடுத்த சிறந்த இசைப் படைப்புகளில் இதற்கே முதலிடம். அவருடைய இசை இப்படத்தை சாதாரண பழிவாங்கும் கதையிலிருந்து உயர்த்தி, பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு திரையரங்க அனுபவமாக மாற்றி இருக்கிறது என்று சொல்லலாம். சில காட்சிகளில் இறங்கி அடித்து ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்.  

தமிழ் சினிமாவில் எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் நடிகராகவும் நம்பிக்கையான அறிமுகத்தைத் தந்திருக்கிறார்.

முதல் படம் என்பது ஆங்காங்கே தெரிந்தாலும் முற்றிலுமாக குறை சொல்லிவிடமுடியாத ஒரு நடிப்பை தந்திருக்கிறார். எனினும் கோபம், துக்கம், போன்ற உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்த வேண்டிய சில இடங்களில் தடுமாறுகிறார்.

வாமிகா கப்பிக்கு அவரது கரியரில் முக்கியமான படமாக ‘டிசி’ இருக்கும். படத்தில் பல மாஸ் தருணங்கள் அவருக்கு உள்ளன. குறிப்பாக அவர் முதல் முறை துப்பாக்கியைத் தூக்கும் அந்தத் தருணத்தில் அரங்கம் அதிர்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் கிரிஷ் தயாள், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, லோகேஷின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் நிறைவான நடிப்பை நல்கியிருக்கின்றனர்.

அருண் மாதேஸ்வரனின் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக எப்போதுமே குறை சொல்லமுடியாதவை. ‘டிசி’யும் அதற்கு விதிவிலக்கல்ல. முகேஷின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னாவின் எடிட்டிங் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்து திரைக்கதைக்கு ஈடு கொடுத்திருக்கின்றன. ஸ்டண்ட் குழுவினருக்கு கூடுதல் பாராட்டுகள். குறிப்பாக, இடைவேளைக்கு முந்தைய ஆக்‌ஷன் காட்சி  படமாக்கப்பட்ட விதம் சர்வதேச தரம். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் அனைத்தும் கச்சிதமாக அமைந்து ஆடியன்ஸை ஆராவாரம் செய்ய வைக்கும் இடம் அது. 

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் பாதியில் இருந்த ஈர்ப்பு, இரண்டாம் பாதியில் இல்லாமல் போகிறது. வன்முறை மட்டுமே கூடிக்கொண்டே போகிறதே தவிர, கதையின் உணர்வுபூர்வமான ஆழம் அதன்பிறகு நகரவே இல்லை. தொடர்ந்து வரும் சண்டைகள் ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன.

பல இடங்களில் வசனங்கள் சற்று செயற்கையாகவும், ஆழமில்லாததாகவும் தோன்றுகின்றன. சில இடங்களில் கதாபாத்திரங்கள் பேசுவது இயல்பான உரையாடலாக இல்லாமல், கதையைச் சொல்ல வேண்டுமே என்பதற்காக வெறுமனே எழுதப்பட்ட வசனங்களாக தெரிகின்றன. 

இரண்டாம் பாதியில் இருக்கும் இதுபோன்ற குறைகளால் படம் முடியும் தருவாயில் முழு திருப்தியை தராத உணர்வு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. எனினும், அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களைக் காட்டிலும் இப்படத்தில் மனித உணர்வுகள் அலசப்பட்ட விதம் ஆழமானது. முதல் பாதியில் இருந்த திரைக்கதை ஒழுங்கை இரண்டாம் பாதியில் தக்க வைத்திருந்தால் தமிழில் மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருந்திருக்கும் இந்த ‘டிசி’. அனிருத்தின் இசை, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக தயங்காமல் டிக்கெட் எடுக்கலாம். 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version