உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பு வரை, ராம ஜென்ம பூமி தீர்த்த க் ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் தினமும் சராசரியாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், திருட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இந்தத் தொகை தினமும் ரூ.24 லட்சம் முதல் ரூ.26 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தத் தரவுகளின் அடிப்படையில், இதற்கு முன்பு தினமும் ரூ.6 லட்சம் முதல் 8 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப் பற்ற கற்களின் துல்லியமான அளவும், மதிப்பும் வழக்கமான நடைமுறைகளின் பகுதியாக இல்லை. இந்தக் குறைபாட்டை குற்றம்சாட்டப் பட்டவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி உள்ளனர். கோயிலிலிருந்து திருடப்பட்ட நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றியிருக்கலாம் என்றும் எஸ்ஐடி சந்தேகிக்கிறது.
ஏனெனில், கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளை இதுவரை மீட்க முடியவில்லை. நகைகளாகப் பெற்ற காணிக்கைகள் மற்றும் அவற்றைப் பராமரிக்கும் தற்போதைய நடைமுறைகள் குறித்து எஸ்ஐடி விரிவாக விசாரணை நடத்தியது. நகைகள் தொடர்பான ஆவணங்களையும், இந்திய அரசின் நிறுவனமான ‘பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ உடனான பரிவர்த்தனை தொடர்பான கோப்புகளும் ஆய்வுக்காக வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட உலோகங்களின் முழுமையான விவரங்களையும் எஸ்ஐடி அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இதனிடையே, அறக்கட்டளை சமர்ப்பித்த வருடாந்திர வரவு செலவுகள் மீதான தணிக்கை கணக்குகளிலும் தவறுகள் இருப்பதை எஸ்ஐடி கண்டுபிடித்துள்ளது. இதை உறுதி செய்ய அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோரிடமிருந்து சில முக்கிய ஆவணங்களை எஸ்ஐடி கோரியுள்ளது.
மத்திய அரசின் முன்னாள் உள்துறை செயலாளரான எஸ்.லக் ஷ்மி நாரயணா தன் மனைவி சரஸ்வதியுடன் கடந்த ஏப்ரல் 2024ல் அயோத்திக்கு வந்துள்ளார். அப்போது தங்க முலாம் பூசப்பட்ட 522 பக்க ராமச் சந்திரமானஸ் புனித நூலை (147 கிலோ) கோயிலுக்காக சம்பத் ராயிடம் அளித்துள்ளார். கருவறையில்வைப்பதாகக் கூறப்பட்ட நூலை காணவில்லை என்றும், இதற்கான ரசீது அளிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
