திருமணத்துக்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதியை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண வரன் மையத்தை நடத்தி வருபவர்கள் முகேஷ் பைரங்கி, சுனிதா தம்பதியினர். ஆனால், இவர்கள் பெரும்பாலும் வரன் பார்த்து தராமல் மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் மிகப்பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போகிறோம் என்று கூறி 42 மணமகன் வீட்டாரிடமிருந்து தலா ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் பெற்றுள்ளனர். 42 குடும்பங்களிடமிருந்து சுமார் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த மணமகன்கள் பெரும்பாலானோருக்கு அதிக வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை.
தகுந்த மணப்பெண் கிடைக்காததால் விரக்தியில் இருக்கும் குடும்பத்தாரை கண்டறிந்து அவர்களுக்கு மணப்பெண் ஏற்பாடு செய்து தருவதாக முகேஷ், சுனிதா தம்பதியினர் கூறி ஏமாற்றியுள்ளனர். மணப்பெண்கள் அனைவரும் இந்தூரிலுள்ள ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தவர்கள் என்று கூறி பெண்களின் புகைப்படங்களைக் காட்டியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் இன்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவையாகும். மே 24ம் தேதி தேவாஸிலுள்ள ராதாகஞ்ச் கிளப் வளாகத்தில் திருமணம் நடைபெறும் என்றும், மணப்பெண் குடும்பத்தார் அனைவரும் அங்கு வந்து சேருமாறும் முகேஷ், சுனிதா கூறியுள்ளனர்.
இந்நிலையில், மே 24-ம் தேதி காலை ராதாகஞ்ச் கிளப் வந்தபோது அங்கு திருமணத்துக்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் அங்கு மணப்பெண்களும் இல்லை என்பதையும் கண்டு மணமகன்கள் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கேட்டதற்கு இந்தூரில் இருந்து அவர்கள் கிளம்பி விட்டனர் என்றும் விரைவில் வந்து சேர்ந்து விடுவர் என்றும் முகேஷ், சுனிதா தம்பதியினர் சமாளித்துள்ளனர்.
காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை காத்திருந்த நிலையில், யாரும் வராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகன்கள், முகேஷ், சுனிதா தம்பதி மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
