தமிழகம் முழுவதும் சுகாதாரம், உயர்கல்வி, நகராட்சி நிர்வாகம், வீட்டு வசதித் துறைகளின் சார்பில் ரூ.1,027.49 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்த முதல்வர் விஜய், ரூ.710.50 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளில், ரூ.112.85 கோடியில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.
அத்துடன், திண்டுக்கல், கரூர் மாநகராட்சிகள், திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகளில் ரூ.710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய குடிநீர், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சுகாதாரத்துறை சார்பில், ரூ.113 கோடி செலவில் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆத்தூர்,மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிரியக்க சிகிச்சை மையம், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவற்றைத் திறந்துவைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னை, திருவள்ளூர், தருமபுரி, புதுக்கோட்டை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் 9 திட்டப்பகுதிகளில் ரூ.525.75 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் விஜய் திறந்தார்.
மேலும், சிஎம்டிஏ சார்பில் சென்னை, பெரம்பூரில் ரூ.1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
அதேபோல், உயர்கல்வித் துறை சார்பில், அரசு பாலிடெக்னிக்குகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ரூ.274.46 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகம், பணிமனைக் கட்டிடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டிடங்கள் உள்ளிட்ட 51 கட்டிடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், பெ.விஸ்வ நாதன், ப.ராஜ்குமார், தலைமைச் செயலர் மு.சாய்குமார் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், உயர் அதிகாரிகள் பங் கேற்றனர்.
