குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கோகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மாநில தீவிரவாத தடுப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு துறைமுகத்துக்கு வந்த குஜராத் ஏடிஎஸ் படை அதிகாரிகள், கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் சோதனை நடத்தினர். அப்போது கடல் பகுதியில் ஒரு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அந்தக் கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 பைகளில் 118 கிலோ எடையுடைய கோகைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.1,150 கோடியாகும்.
இது குறித்து குஜராத் போலீஸ் டிஜிபி கே.எல்.என்.ராவ் கூறும்போது, “டெல்லியில் வசிக்கும் உகாண்டா, தான்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பேருக்கு இந்த பொருள் கப்பலில் வந்துள்ளது. இது தொடர்பாக இதுவரை 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். இந்த கப்பல் பிரேசில், பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகள், மெக்ஸிகோ, அமெரிக்கா, கராச்சி துறைமுகம் வழியாக முந்த்ரா துறைமுகத்தை அடைந்துள்ளது” என்றார்.
