பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோவில், “வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் புதிய மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்தார்.
இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே நேற்று காலை பேஸ்புக் சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ திடீரென நீக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை சார்பில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
மெட்டாவின் சர்வதேச விவகார தலைவர் ஜோயல் கப்லான் மற்றும் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதமர் மோடியின் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது. அந்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தெரியாமல் நடந்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறோம்” என்றார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “மெட்டா நிறுவனத்தின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கியதை மிக தீவிர பிரச்சினையாக கருதுகிறோம். இதுதொடர்பாக மெட்டா நிறுவன மூத்த அதிகாரிகளை நேரில் வரவழைத்து விளக்கம் கோரப்படும்” என்று தெரிவித்தன.
அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் அங்கமான இன்ஸ்டாகிராமில் சிறாரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் விளம்பரங்கள் இடம்பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வாட்ஸ் அப் செயலியில் யூசர் நேம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
