Home தேசிய செய்திகள் சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

0

சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சந்திரயான்-5 திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து நாங்கள் செயல்பட உள்ளோம். இது, சந்திரயான்-5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

2023 ஆகஸ்ட் 23-ல் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் எந்தவித சேதாரமும் இன்றி சாப்ட் லேண்டிங் மூலம் விக்ரம் லேண்டரை தரையிறக்கியது. இதன் மூலம், இந்த சாதனையை படைத்த உலகின் நான்காவது நாடு என்ற பெருமை ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு கிடைத்தது.

சந்திரயான்-5 திட்டம் நிலவை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் நோக்கம் கொண்டது. எனவே, சந்திரயான் 3 -ல் பயன்படுத்தப்பட்டது போன்று சிறிய வகை ரோவர் இதில் இடம்பெறாது. அதற்கு பதிலாக 250 கிலோ எடையுள்ள பெரிய ரோவரை அனுப்பி சந்திரனின் மேற்பரப்பை விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.

சந்திரயான்-1 திட்டம் கடந்த 2008-ம் ஆண்டிலும், சந்திரயான்-2 திட்டம் 2019-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. சந்திரயான்-4 திட்டத்தை 2027-க்குள் நிறைவேற்ற இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரயான் -5 மற்றும் 6-வது திட்டங்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் நிறைவேற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது, விண்வெளித் துறையில் 44 பில்லியன் டாலர் மைல்கல்லை தொடுவதற்கு ஏதுவாக அமையும்.

சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து ககன்யான் திட்டத்தையும் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version