பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சைக்கு கீமோதெரபி மருந்துகளான சிஸ்பிளாட்டின் மற்றும் கார்போபிளாட்டின் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
இந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விலை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி யிருப்பது, மருந்து தட்டுப்பாடு என்பது உண்மையான பிரச்சினை என்பதை அரசே ஒப்புக்கொண்டிருப்பதை காட்டுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அரசு மருத் துவமனைகளையே நம்பி சிகிச்சை பெற்று வருகின்றனர். பல குடும்பங்கள் சிகிச்சை செலவுகளால் கடன் சுமையில் சிக்குகின்றன.
இந்நிலையில், கீமோதெரபி மருந்துகளின் விலை உயர்வு நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தும்.
புற்றுநோய் என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையும், மன நிலையையும் கடுமையாக பாதிக்கும் நோயாகும்.
எனவே, ஏழை மக்களுக்கு சிகிச்சை பாதிக்கப்படாத வகையில், கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
