தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் எஸ்.ஐ. உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.
அதன்படி, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் வாகன சோதனை மற்றும் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் போலீஸாரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில், புழல் சூரப்பட்டு அருகே 200 அடிசாலையில் மாதவரம் சட்டப்பேரவை தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் காரில் சென்றனர்.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த பறக்கும் படை அதிகாரி சுரேந்தர், போலீஸ் எஸ்.ஐ. ராமச்சந்திரன், காவலர் ஆரிப், வீடியோகிராபர் விஸ்வநாதன் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
