தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறைகளின் மீது நடைபெற்ற விவாதம் வருமாறு:
நிதியமைச்சர் மரிய வில்சன்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடிக்கு கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது.
எ.வ.வேலு (திமுக): தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 54 ஆயிரம் கனஅடி தண்ணீரை தாங்கும் அளவுக்குத்தான் கட்டப்பட்டது. திருவண்ணா மலையில் பெய்த மழை மற்றும் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் என 3 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், தாங்கும் திறன் இல்லாமல், பாலத்தை அடித்துக்கொண்டு சென்றது. இயற்கை சீற்றத்தால் பாலம் உடைந்தது. இதற்கு கட்டிய பொறியாளர் மீது குறை சொல்ல முடியாது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 5 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட்டு பணிகள் செய்துள்ளார்.
ஒவ்வொரு ரூபாய்க்கும் வெள்ளை அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வெள்ளை அறிக்கை முதல்வரின் கவனத்துக்கு சென்றபிறகு வெளியிடப்படும். அப்போது அந்த பாலத்தின் பிரச்சினை தெரியும். கல்லணை கட்டியது சோழர்கள் காலத்தில்.
அந்த பாலம் இன்னமும் எத்தனை மழை வந்தாலும் நன்றாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் கட்டிய பாலம் தான் 3 மாதத்தில் இடிந்து போகிறது. அதற்கு வெள்ளை அறிக்கையில் பதில் கிடைக்கும்.
வேளாண் துறை அமைச்சர் வினோத்: கடந்த திமுக ஆட்சியில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் அங்காங்கே உடைந்து தொங்குகின்றன. கம்பிகள் வெளியே தெரிகின்றன. வீடு மறுசீரமைப்புக்கு ரூ.50 ஆயிரம் எனச் சொல்லி, சிமென்ட்டை பூசிவிட்டு, சுண்ணாம்பு அடித்துள்ளனர்.
கே.என்.நேரு (திமுக): கடந்த காலங்களில் கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் பழுதடைந்துள்ளதாக அமைச்சர் சொல்கிறார். 1986-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி காலத்தில் ரூ.13 ஆயிரத்தில் தொடங்கிய வீடுகள் கட்டும் திட்டம் ரூ.3 லட்சத்துக்கு வந்துள்ளது.
அந்த வீடுகளை நேரடியாக அரசோ, ஒப்பந்ததாரரோ கட்டுவது இல்லை. பயனாளிகளே கட்டுவது. அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று மேற்பார்வை மட்டும் செய்வார்கள். சிலர் கூடுதலாக பணம் போட்டும், சிலர் இருப்பதை வைத்தும் கட்டுகிறார்கள்.
அதனால்தான் வீடுகளைப் பழுதுபார்க்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீங்கள் 70 ஆயிரம் வீடுகளை தலா ரூ.5 லட்சத்தில் கட்டுவதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் கட்டும் வீடுகள் சரியில்லை என்று நாங்கள் பார்த்து சொல்லாத அளவுக்கு நீங்கள் நல்ல முறையில் வீடுகளைக் கட்ட வேண்டும்.
அமைச்சர் வினோத்: நமது முதல்வர் ஆட்சியில் கட்டி கொடுக்கும் வீடுகள் தரம் உள்ளதாக இருக்கும்.
நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த்: நாங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வோம். தரமாகத்தான் வீடுகளைக் கட்டுவோம். அதற்குதான் ரூ.5 லட்சம் ஆகும். திமுக உறுப்பினர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்… இனிமேல் நீங்கள் கனவில்கூட ஆட்சிக்குவர முடியாது என்பதை உறுதியாகச் சொல்கிறோம்.
நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். நாங்கள் தவறு எதுவும் செய்ய மாட்டோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
