தமிழக அரசின் பொதுத்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக வீடுகளின் பட்டியல் தயாரித்தல், வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரையும் 2-வது கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி 2027 பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட அரசு ஊழியர்களை இந்த பணி முடிவடையும் காலமான 2027 மார்ச் 31 வரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணியான வீடுகளின் பட்டியல் தயாரிப்பு பணி ஜூலை 10-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை ஆகஸ்ட் 30-ம் தேதி வரை இடமாற்றம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
