‘பிக்பாஸ்’ ராஜு ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படத்துக்கு ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். துஷாரா விஜயன், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ் தாமரைச் செல்வி, நாடகக் கலைஞர் யாழினி, பிரிதம் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். டி.எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார்.
சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டூடியோஸ் ஹெச்.வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. இதன் தொடக்கவிழா பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.
படம் பற்றி ராஜு ஜெயமோகன் கூறும்போது,”ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்ல குணங்களும், குறைகளும் இருக்கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் பலர், 2 வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒன்று அவர்களின் உண்மையான வாழ்க்கை. மற்றொன்று, சமூக வலைதளங்களில் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் முகம்.
சில நேரங்களில் அந்த டிஜிட்டல் அடையாளமே தங்களின் உண்மையான முகம் என்று கூட நம்பத் தொடங்கு கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தக் கதை. வித்தியாசமான டார்க் காமெடி மற்றும் ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படம் இது” என்றார்.
