Home மாநில செய்திகள் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: இபிஎஸ்

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: இபிஎஸ்

0

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக, சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும், என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக, புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி ஆகியவை சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், எம்எல்ஏ-க்கள் சித்ரா, மணி, ராஜமுத்து, ஜெய்சங்கரன், நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் சிவபதி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி உள்பட அதிமுக-வினர் பலர் கலந்து கொண்டனர். ரத்த தான முகாமை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் தான் அதிகம் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், இந்த ரத்த தானம் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவர். அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை’’ என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பர். தமிழகத்தில் பல இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆத்தூரில் நடந்த சம்பவம் ஊடகத்தில் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. எனவே, கள்ளச்சாராயவிற்பனை, போதைப்பொருள் விற்பனை போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்கிறது. பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வேலியே பயிரை மேய்வது போல ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறு, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆசிரியர்களை நம்பித் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆசிரியர்கள்தான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டியது தொடர்பாக கேட்கிறீர்கள். எதுவாக இருந்தாலும் காவல்துறையினர் சட்டப்படி தான் நடந்து கொள்ள வேண்டும்.

ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் அதிமுகவை அங்கீகரித்துள்ளனர். அதிமுக இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும், என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version