Home மாநில செய்திகள் “தவெக ஆட்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு” – சி.வி.சண்முகம் அறிவிப்பு

“தவெக ஆட்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு” – சி.வி.சண்முகம் அறிவிப்பு

0

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார்.

இந்த இயக்கம் திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம். இந்த 53 ஆண்டு காலமாக அக்கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வந்திருக்கிறோம். இந்தச் சூழலில் எங்கள் முன் வைக்கப்பட்ட கோரிக்கை என்னவென்றால், எந்த திமுகவை நாங்கள் எதிர்த்து வந்தோமோ அந்த திமுக ஆதரவோடு, தன்னை முதல்வராக்க தேர்வு செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சம்மதிக்க வில்லை.

நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்குள்ளானோம். அப்படி திமுக உடன் இணைந்தால் அதிமுகவே இல்லாமல் போய்விடும் என்று சொன்னோம். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில்அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது. அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் யாரையும் குறை கூறவில்லை.

அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு முன்பு இருந்த எந்த கூட்டணியிலும் இனி அதிமுக இருக்காது. இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும். புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்த தீர்மானத்தின் படி, தற்போது வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கலாம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்துள்ளோம். கொறடாவாக சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற குழு துணை தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version