Home தேசிய செய்திகள் ‘வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை’ – மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

‘வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை’ – மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

0

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தற்போதுள்ள, ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971’-ஐ, திருத்துவதற்கான இந்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார்.

‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ன் படி, தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்தை பாடும் கூட்டத்தை வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறு விளைவிப்பதாகவோ கண்டறியப்படும் எவருக்கும் மூன்றாண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.

1971ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி’, தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை பாடுவதை வேண்டுமென்றே தடுப்பதற்கோ அல்லது அதைப் பாடும் கூட்டத்துக்கு இடையூறு விளைவிப்பதற்கோ தண்டனை வழங்க வழி வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்துக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேசிய பாடலுக்கும் அதேபோன்ற பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

“தற்போது தேசியப் பாடலாகக் கவுரவிக்கப்படும் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதை அவமதிப்பதைத் தடுக்க சட்டப்பூர்வ ஏற்பாடு ஏதுமில்லை. எனவே, தேசியப் பாடலை பாடுவதை வேண்டுமென்றே தடுப்பதையோ அல்லது அத்தகைய பாடலைப் பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதையோ தடை செய்யவும், அத்தகைய செயல்களைத் தண்டனைக்குரியதாக மாற்றவும், சம்பந்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 3ல் தேசியப் பாடலையும் அதன் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் திருத்தம் செய்ய முன்மொழிப்பட்டுள்ளது” என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல், தேசிய கீதமான ஜன கண மன-க்கு இணையான கவுரவத்தையும் அந்தஸ்தையும் பெற வேண்டும் என்று 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி நடைபெற்ற அரசியலமைப்புச் சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறி இருந்ததையும் இம்மசோதா சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி 28-ம் தேதி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்கான முதல் கட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, ‘குடியரசுத் தலைவர் வருகை, தேசியக் கொடி ஏற்றம் மற்றும் ஆளுநர்களின் உரை போன்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் 3 நிமிடங்கள் 10 வினாடிகள் கால அளவு கொண்ட வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களும் பாடப்பட வேண்டும்.

தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும்போதோ அல்லது இசைக்கப்படும்போதோ முதலில் தேசியப் பாடலே பாடப்படவோ அல்லது இசைக்கப்படவோ வேண்டும். தேசியப் பாடல் பாடப்படும்போது அனைவரும் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொண்ட அந்த உத்தரவில், அனைத்துப் பள்ளிகளிலும் அன்றையப் பணிகளைத் தேசிய பாடலை அனைவரும் இணைந்து பாடுவதன் மூலமே தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version