Tuesday, September 26, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி

உலக பாரம்பரிய நாள் நினைவு சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான உலக நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இது கலாச்சார பாரம் பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் உலக பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 -ந்தேதி கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய நாளின் முக்கிய நோக்கம், வரலாற்று கட்டிடங்கள், நினைவு சின்னங்கள் மற்றும் தொல் பொருள் தளங்கள் போன்ற கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதாகும். அந்நாளை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

யுனெஸ்கோ என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்பது நமது வளமிக்க கலாச்சார மற்றும் வரலாற்று வம்சாவளியை பாதுகாக்கும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியை பரப்பும் ஒரு அமைப்பாகும். இந்த சிறப்பு அமைப்பு உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க மனிதனால் உருவாக்கப்பட்ட புதையல்களை பாதுகாப்பதில் மகத்தான நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்தியாவில் யுனெஸ்கோ 30 உலக பாரம்பரிய தளங்களை பட்டிய லிட்டுள்ளது. அதில் நான்கு தமிழ்நாட்டை சேர்ந்தவை. அவை தஞ்சாவூரில் உள்ள பிரிஹதீஸ்வரர் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஷ்வரர் கோவில், மகாபலிபுரத்தில் உள்ள நினைவு சின்னங்களின் குழு, நீலகிரி மலை ரெயில்வே ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் அவற்றப்பற்றிய விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்த கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி கூறுகையில், நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொருட்களும், இடங்களும் தான் நம் பாரம்பரிய சொத்துக்கள். அவற்றை நாம் பத்திரமாக பேணி பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வினை இன்றைய தலைமுறை யினருக்கு தெரிவிப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம் என்றார். இந்த கண்காட்சியினை இருளப்பபுரம் செப்பீல்டு இனோவெட்டிவ் சி.பி.எஸ்.சி.பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மாணவர்களுக்கு அருங்காட்சியகம் முழுவதும் சுற்றி காட்டப்பட்டு வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவங்கள் எடுத் துரைக்கப்பட்டன. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி ஏப்ரல் மாதம் முழுமையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments