மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் துவக்க வீராங்கனை சோபியா 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், லாரா வோல்வார்ட்- ஹர்லீன் தியோல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. ஹர்லீன் தியோல் 31 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், லாராவுடன் ஆஷ்லி கார்ட்னர் இணைந்தார். அதிரடியாக ஆடி அரை சதம் கடந்த லாரா, 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஆஷ்லியுடன் தயாளன் ஹேமலதா இணைய, 20 ஓவர் முடிவில் குஜராத் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. ஆஷ்லி 51 ரன்களுடன் களத்தில் இருந்தார் இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது.