Wednesday, December 6, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்ரூ.1000 கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்வதில் சிக்கல்: சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு பரிசீலனை

ரூ.1000 கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்வதில் சிக்கல்: சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு பரிசீலனை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. 1.06 கோடி மகளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18-ந்தேதி முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் பலர் பதற்றம் அடைந்தனர். தங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்று நினைத்தனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் குவியத் தொடங்கி உள்ளனர்.

அங்கு அமைக்கப்பட்டு உள்ள உதவி மையங்களில் விண்ணப்பத்தின் நிலை பற்றி விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது சர்வர் பிரச்சனை எழுவதால் அனைவருக்கும் விண்ணப்ப நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்ள தனி இணைய தளம் (https://kmut.tn.gov.in) தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டால் ஒரு முறை பயன்படுத்தும் கடவு எண் கைப்பேசிக்கு வரும். இதைக் கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கி உள்ளது. இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள், இணைய சேவை மையங்களை நாடினாலும் மேல்முறையீடு செய்ய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து இணைய சேவை மையத்தினர் கூறுகையில், “மேல்முறையீட்டுக்கான வசதி இணைய சேவை மையங்களில் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. விண்ணப்பத்தின் நிலையை மட்டுமே இலவசமாக பார்த்து விண்ணப்பதாரர்களுக்கு கூறி வருகிறோம்” என்றனர்.

விண்ணப்பங்களின் நிலையை அறிய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மகளிர் குவிந்திருக்க, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள். எனவே இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments