மேற்கு தொடர்ச்சி மலையில் 5-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீகோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன் புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. அங்குள்ள காய்ந்த புற்கள், சருகுகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் தீ வனம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இன்று 5-வது நாளாக வனத்தில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த வன பணியாளர்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனசரக பணியாளர்கள் என மொத்தம் 300 பேர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அவர்களில் சிலருக்கு கண், கால்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு உடனடியாக சிகிச்சையும் எடுத்து கொண்டு, தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே 5 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினர் விமானப்படையின் உதவியை கோரியுள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:- தரைப்பகுதியில் உள்ள புற்கள், காய்ந்த சருகுகளில் தீ பரவி வருகிறது. வனத்தில் உள்ள சில மூங்கில் மரங்கள் தீயில் எரிந்துள்ளன. குறிப்பிட்ட இடங்களில் தீ தடுப்பு கோடுகளை அமைத்து, எதிர் தீ வைத்து தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. காட்டுத்தீ காரணமாக வனவிலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. தற்போது ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் விமான படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் வந்தால் பக்கெட் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல வசதியாக அருகிலேயே ஒரு குட்டையும், நீச்சல் குளமும் உள்ளது. நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தால் இன்று அல்லது நாளைக்குள் தீயை அணைக்கும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படலாம். வன எல்லைப்பகுதியை தாண்டி தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.