அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமிக்க முதல்வர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை செந்தில் பாலாஜி எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார்.
தற்போது அவர் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். மேலும், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. எனவே, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது. வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கி உள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.