கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 3-ந் தேதி சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரெயிலில் மர்ம நபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் டி 1 பெட்டியில் இருந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் தீயில் எரிந்து இறந்தனர். இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த ரெயில் பெட்டியிலும் சோதனை நடத்தினர். இதில் தீ வைப்பில் ஈடுபட்ட நபர் விட்டு சென்ற செல்போன், பெட்ரோல் பாட்டில், டைரி மற்றும் சில பொருள்களை கைப்பற்றினர்.
அவற்றை ஆய்வு செய்தபோது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்தது. மேலும் அந்த நபர் வடமாநிலத்தை சேர்ந்த ஷாருக் ஷைபி எனவும் தெரியவந்தது. அவரை தேடியபோது அந்த நபர் வடமாநிலத்திற்கு தப்பி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே அந்த நபருக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் மத்திய உளவு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கோழிக்கோடு சென்று விசாரித்தனர். மேலும் அவர்கள் வடமாநிலத்தில் உள்ள அதிரடி படை போலீசாரையும் உஷார்படுத்தினர். இதில் கேரளாவில் இருந்து ஷாருக் ஷைபி உத்தரபிரதேச மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதினர். எனவே அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் நேற்று முன்தினம் நொய்டாவை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்தனர். அவரது பெயரும் ஷாருக் ஷைபி என்பதால் அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அந்த வாலிபருக்கு கேரள ரெயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்ததை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் கேரளாவில் ரெயில் பயணிகளை எரித்து கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் இருப்பது அதிரடி படை போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த ஷாருக் ஷைபியை கைது செய்தனர். இதனை கேரள போலீஸ் டி.ஜி.பி.யும் உறுதி செய்தார். மேலும் ரத்தினகிரியில் கைதான ஷாருக் ஷைபியை கேரளா அழைத்து வர போலீசார் அங்கு சென்றிருப்பதாகவும் கூறினார். இதற்கிடையே ரத்தினகிரியில் ஷாருக் ஷைபி கைதானது எப்படி? என்பதையும், அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்தும் மகாராஷ்டிர அதிரடி படை போலீஸ் டி.ஐ.ஜி. மகேஷ் பாட்டீல் கூறியதாவது:-
கேரளாவில் ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஷாருக் ஷைபி அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றால் சிக்கி கொள்வோம் என்பதால் அங்கிருந்து உடனடியாக மகாராஷ்டிர மாநிலத்திற்கு வந்து விட்டார். இங்கு ரத்தினகிரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள், அவரது காயம் பெரிதாக இருந்ததால் அவருக்கு முதலுதவி அளித்துவிட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற ஷாருக் ஷைபி, அதுவரை சுவிட்ச் ஆப் செய்திருந்த செல்போனை ஆன் செய்தார். உடனே அவர் ரத்தினகிரி மாவட்ட ஆஸ்பத்திரியில் இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அவரை பிடிக்க அங்கு விரைந்து சென்றோம். அதற்குள் அவர் நாங்கள் வருவதை தெரிந்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதற்காக ரத்தினகிரி ரெயில் நிலையத்திற்கு சென்றபோது அவரை பிடித்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது ஏன்? என்பது பற்றியும் ஷாருக் ஷைபி போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்விபரம் வருமாறு:- கேரளாவிற்கு கடந்த வாரம்தான் ஷாருக் ஷைபி வந்துள்ளான். ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்றபோது ரெயில் பெட்டியில் பயணிகளுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது அதே பெட்டியில் இருந்த ஷாருக் ஷைபியின் நண்பர், பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றினால் அவர்கள் பயந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறியபடி ஷாருக் ஷைபி பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார். அந்த நண்பர் யார்? அவர் ஏன் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்ற கூறினார் என்பது பற்றி விசாரிக்க உள்ளோம், கேரளாவில் விசாரிக்கும்போது இதுபற்றிய முழு விபரம் தெரியவரும் என்றனர். இதற்கிடையே மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் இருந்து ஷாருக் ஷைபியை போலீசார் இன்று அதிகாலை கேரளா அழைத்து வந்தனர். அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோழிக்கோடு அழைத்து சென்றனர். அந்த வாகனம் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கோழிக்கோடு நகரை நெருங்கியபோது திடீரென பழுதானது. உடனே அந்த பகுதியில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் வாகனத்தை உடனடியாக பழுதுபார்த்து போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.