டெல்லி மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகிறார். மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் இன்னும் வாய் திறக்கவில்லை.
இன்று பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு முன்பாக பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தில் தங்களுடைய நிலைப்பாட்டை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கூட்டத்தை புறக்கணிக்க நேரிடும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புறப்பட்டார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்த காங்கிரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் ”பா.ஜனதாவிற்கு எதிராக ஒன்றிணைந்து, ஆட்சியில் இருந்து அக்கட்சியை அப்புறப்படுத்த வேண்டும். இதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் திருத்தம் விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன் முடிவு எடுக்கப்படும்” என்றார்.