கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 2 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜனதா தளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் ஆளும் பா.ஜனதா இதுவரை ஒரு தொகுதிக்கு கூட வேட்பாளரை அறிவிக்கவில்லை. பா.ஜனதா தலைவர்கள் கடந்த 4, 5 நாட்களாக வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பா.ஜனதாவில் முக்கியமான தலைவர்கள் தங்களின் மகன்களுக்கும் டிக்கெட் கேட்கிறார்கள். ஆனால் இதுவரை அதுகுறித்து இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. கடந்த 9-ந் தேதி பா.ஜனதா உயர்நிலை குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த குழுவின் உறுப்பினர்கள் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் வழங்க வேண்டும் என்றும், தந்தை-மகனுக்கு டிக்கெட் வழங்க கூடாது என்றும் பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பா.ஜனதா மேலிடம், வாரிசுகளுக்கு டிக்கெட் வேண்டுமெனில் அவர்களின் தந்தைகள் தேர்தல் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளது. எடியூரப்பா ஏற்கனவே தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிட்டார். நேற்று பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈசுவரப்பாவும், தேர்தல் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதே போல் வீட்டு வசதி மந்திரி சோமண்ணா தேர்தல் அரசியலில் இருந்து விலகினால், அவரது மகனுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சோமண்ணா இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் மவுனமாக உள்ளார்.
பா.ஜனதா உயர்நிலை குழு கூட்டத்தை தொடர்ந்து அதன் பிறகு மறுநாள் 10-ந்தேதி அதாவது நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வீடுகளில் 5 ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒன்றில் மட்டுமே எடியூரப்பா கலந்து கொண்டார். அமித்ஷா எடியூரப்பாவை தவிர்த்துவிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதே போல் ஜே.பி.நட்டா வீட்டில் நடைபெற்ற கூட்டத்திலும் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை. உள்துறை மந்திரி அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் எடியூரப்பாவை தவிர்த்துவிட்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு டிக்கெட் கேட்பதால் தான் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதுபோல் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கொண்டு சென்ற வேட்பாளர் பட்டியலில் 40 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு திருப்தி இல்லை எனவும் கூறப்படுகிறது. அத்துடன் நீண்டகாலமாக எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களுக்கு பதிலாக புதுமுகங்களை களமிறக்கவும் மேலிட தலைவர்கள் விரும்புகிறார்கள். இதனால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஆனது. இதுகுறித்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், “224 தொகுதிகளுக்கும் வேட்பாளா்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். சில தொகுதிகளில் கூடுதல் தகவல்களை மேலிட தலைவர்கள் கேட்டுள்ளனர். தேர்தல் பிரசாரம் குறித்தும் விவாதித்தோம். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் பிரசார பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். எடியூரப்பா ஆலோசனை வழங்கிவிட்டு கர்நாடகம் புறப்பட்டு சென்றார்” என்றார்.