நீலகிரி மாவட்டம் முதுமலையில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையே இந்த தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். இந்த திரைப்படம் உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இன்று அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சர்வதேச குறு ஆவணப்படத்திற்கான விருதினை முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியை கொண்டு உருவாக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம் பெற்றுள்ளது.
தி எலிபெண்ட் விஸ்பரரஸ் படம் எடுக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் யானைகளை பராமரிக்கும் பகுதியாகும். இங்கு ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை பிடித்து கும்கியாகவும், காட்டுக்குள் தாயை பிரிந்து இருக்கும் குட்டிகளை அழைத்து பராமரிப்பது வழக்கம். அப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்த 5 மாத அம்முக்குட்டி என்றழைக்கப்படும் பொம்மி யானையும் வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு முகாமுக்கு கொண்டு வந்தனர்.
இந்த 2 யானைகளையும் பராமரிக்கும் பொறுப்பானது அங்கு பாகனாக பணியாற்றி வந்த பொம்மனுக்கும், அவரது மனைவி பெள்ளிக்கும் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த யானையை தங்கள் குழந்தையை போலவே பாவித்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த பிரபல ஆவணப்படம் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ் முதுமலைக்கு வந்தார். அவர், பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து, குட்டி யானைகள் குறித்தும், அவற்றை பராமரித்து வரும் உங்களை வைத்தும் ஒரு ஆவணப்படம் இயக்க உள்ளேன். இதற்காக உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெற்றுள்ளேன் என கூறினார்.
2 பேரும் சம்மதிக்கவே இந்த ஆவணப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை குனீத் மோங்கா என்பவர் தயாரித்திருக்கிறார். படம் வெளியானதும் பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த தம்பதிக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கு இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டு, இறுதி பட்டியலுக்கு தேர்வானது. இறுதிப்பட்டியலில் வென்று ஆஸ்கர் விருதையும் இந்த படம் பெற்று விட்டது. ஆஸ்கர் விருதினை பெற்றதன் மூலம் இந்த படமும், படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரும் சர்வதேச அளவில் புகழ் பெற்று விட்டனர். இந்தியாவை சேர்ந்த ஆவண திரைப்படத்திற்கு, ஆஸ்கர் விருது கிடைத்த தகவல் அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பல தரப்பினரும் இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த படம் மூலம் காட்டுக்குள் இருக்கும் ஒரு சிறிய கிராமமான தங்கள் கிராமம் சர்வதேச அளவில் புகழ் பெற்று விட்டதாக அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். அவர்கள் பொம்மன் வீட்டு முன்பு குவிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்கர் விருது வென்றது குறித்து பொம்மன் கூறியதாவது:- ஆஸ்கர் விருது பெற்றது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. இது எனக்கு மட்டும் கிடைத்த பெருமை அல்ல. எல்லோருக்குமானது. ஆஸ்கர் விருது பெற்ற தகவல் எனக்கு தெரியாது. மற்றவர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்ட பிறகே நாங்கள் நடித்த படம் ஆஸ்கர் விருது பெற்றது தெரியவந்தது. இது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கு இப்போது 54 வயதாகிறது. நான் 40 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறேன். தாயிடம் இருந்து பிரிந்த இந்த 2 குட்டி யானைகளையும் நாங்கள் எங்கள் குழந்தைகளை போலவே நானும் எனது மனைவியும் கவனித்து வந்தோம். இரவில் நாங்கள் தூங்கும் நேரத்தில் குட்டி யானைகள் பசியால் சத்தமிடும். அப்படி அது எந்த நேரம் சத்தமிட்டாலும் அதற்கு என்ன தேவை என்பதை நேரம் காலம் பாராமல் வழங்கி வந்தோம். யானை இருக்கும் இடத்தின் அருகேயே பரண் அமைத்து இரவு முழுவதும் யானையை பாதுகாத்து வருவோம். எங்கள் வாழ்க்கை முறை படமாக்கப்பட்டு அது உலகளவில் பரவி விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இருந்தாலும் எனக்கு தர்மபுரியில் இன்று பராமரிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பொம்மனின் மனைவி பெள்ளி கூறியதாவது:- ஆஸ்கர் விருது கிடைத்தது எங்கள் ரெண்டு பேருக்கும் சந்தோஷமாக உள்ளது. ரகு, பொம்மியால் மட்டுமே இது சாத்தியமானது. அந்த 2 யானைகளையும் நாங்கள் குழந்தைகளாகவே நினைத்து வளர்த்து வந்தோம். இந்த விருதால் முதுமலைக்கே சந்தோஷம். முதுமலைமட்டுமின்றி தமிழக அரசு, வனத்துறை உள்பட அனைவருக்குமே இது மகிழ்ச்சியாகும். இந்த சந்தோஷத்திற்கு எல்லாம் காரணமே ரகுவும், பொம்மியும் தான். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து பொம்மனின் பேத்தி சவுஜனா கூறும்போது, யானை எங்களுடன் எப்போதும் மகிழ்ச்சியாக விளையாடும். துதிக்கையை தூக்கி எங்கள் மீது போடுவதும், அதனை கொண்டு எங்களை செல்லமாக தாக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். நான் தினமும் தாத்தா பாட்டியுடன் சேர்ந்த இந்த யானைக்கு பால், களி, தேங்காய், உள்ளிட்டவற்றை எடுத்து சென்று கொடுப்பேன். தாத்தா, பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் நானே யானைகளை கவனித்து கொள்வேன். இந்த விருது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.