புதுடெல்லியில் தேசிய பேரழிவு மீட்பு படை இணை இயக்குனர் சஞ்சீவ் குமார் ஜிண்டாலை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து, கன்னியாகுமாரி மாவட்டத்தில் தேசிய பேரழிவு மீட்பு படையின் நிலையம் ஒன்றை அமைக்க கோரிக்கை வைத்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தேசியப் பேரழிவு மீட்பு ஆணையத்தின் இயற்கை பேரழிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் குழுவில் உறுப்பினராக உள்ளேன். எனது தொகுதி மற்றும் மாவட்டமான கன்னியாகுமாரி நீண்ட கடற்கரையைக் கொண்டது. இங்கு சுமார் 42 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் சுமார் 4 லட்சம் பேர் மீன்பிடி தொழில் மற்றும் மீன் வியாபாரத்தை மையமாக கொண்டு வாழ்த்து வருகிறார்கள்.
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள எங்கள் மாவட்டத்தின் நிலப்பரப்பு காரணமாக புயல் போன்ற இயற்கை பேரழிவினால் எமது மீனவ கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. கடல் சீற்றத்தால் கடற்கரை கிராமங்களின் வீடுகள் மற்றும் படகுகள் கடலில் அடித்துச் செல்லப்படுகிறது. மேலும் இத்தகைய இயற்கை சீற்றத்தின்போது கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கின்றனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் தாமிரபரணி ஆறு கரை கடந்து பாயும்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய சம்பவங்களின்போது மீட்பு பணிக்காக நாங்கள் திருவனந்தபுரம் மற்றும் தூத்துக்குடியில் அமைந்துள்ள கடலோர காவல் படையின் உதவியை நாடவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் அவர்கள் வந்து சேருவதற்குள் கால விரயத்தால் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய சம்பவங்களை தவிர்க்க கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கள் மக்கள் நலன் கருதி தேசிய பேரழிவு மீட்பு படையின் நிலையம் ஒன்றை அமைப்பது மிக அவசியமாகும்.. மேலும் தேசிய பேரழிவு மீட்பு ஆணையத்தின் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் எங்கள் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் தன்னார்வ தொண்டர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் எனது தரப்பில் இருந்து செய்து தரப்படும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.