Tuesday, September 26, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 24-ந்தேதி தொடங்குகிறது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 24-ந்தேதி தொடங்குகிறது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து முதல் நாள் விழாவான 24-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது. விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம்(ஜூன்)1-ந்தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம், கஞ்சிதர்மம், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதல் நடக்கிறது. 10-ம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments