தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 1½ வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை தலைவராக கட்சி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். ‘சின்னவர்’ என்று பவ்யமாக அழைக்கின்றனர். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த கட்சி நிர்வாகிகளின் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது. சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து சம்பவங்களை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இதிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அவரது உழைப்புக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திடீரென அவருக்கு முன்கூட்டியே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்று பேசப்படுகிறது. சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி இப்போதே கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.