Tuesday, October 3, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. பெங்களூர், ஓசூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்திலிருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் காய்கறிகளும் குறைவான அளவில் மார்க்கெட்டுக்கு வருவதால் விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது.

பெங்களூரில் இருந்தும், குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது. தற்பொழுது குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த தக்காளிகளின் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் இருந்து மட்டுமே குறைவான அளவு தக்காளி வந்து கொண்டிருக்கிறது. இதனால் தக்காளி விலை கடந்த 2 நாட்களில் கிலோ ரூ.60 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி கடந்த வாரம் ரூ.1000 முதல் ரூ.1,400 வரை விற்பனையானது. இன்று ரூ.2,900 முதல் ரூ.3,300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மிளகாய் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து மிளகாய் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட மிளகாய் இன்று ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பீன்ஸ், கத்தரிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய்களின் விலையும் அதிகரித்து உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:- நாட்டு கத்தரிக்காய் ரூ.100, வரி கத்தரிக்காய் ரூ.70, பச்சை மிளகாய் ரூ.170, குடமிளகாய் ரூ.100, பீட்ரூட் ரூ.50, கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.120, உருளைக்கிழங்கு ரூ.32, பல்லாரி ரூ.25, வெள்ளரிக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.50, சேனை ரூ.70, வெண்டைக்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, காலிபிளவர் ரூ.45, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, சிறிய வெங்காயம் ரூ.100, பூண்டு ரூ.150.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், காய்கறிகளின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. வெளியூர்களில் இருந்து மிக குறைவான அளவில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தக்காளி, மிளகாய்கள் வரத்து 75 சதவீதம் குறைந்துள்ளது. காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் மேலும் அதிகரிக்கும் என்றனர். இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், வழக்கமாக காய்கறிகள் வாங்குவதற்கு சென்றால் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 செலவாகும். ஆனால் தற்பொழுது தக்காளி விலை மட்டுமே கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிளகாய் விலையும் உயர்ந்துள்ளதால் அதை வாங்க முடியவில்லை. இதேபோல் மற்ற காய்கறிகளும் விலை உயர்ந்து காணப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments