Wednesday, December 6, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க குவிகிறார்கள்

ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க குவிகிறார்கள்

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ததில் 57 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன காரணத்துக்காக உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து விண்ணப்பதாரர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. அதில் கார் வைத்திருப்பது, சொத்து அதிகம் இருப்பது, மின்சாரம் அதிகம் பயன்படுத்தியது போன்ற காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இ-சேவை மையம் வழியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் பெண்கள் கூட்டம் அலை மோத தொடங்கி உள்ளது. இ-சேவை மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே பெண்கள் காத்து நிற்கின்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் அரசு நடத்தும் இ-சேவை மையங்கள், தனியார் இ-சேவை மையங்கள், இண்டர்நெட் மையங்களிலும் பெண்கள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு விடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மணலி மண்டல அலுவலகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அங்கிருந்த கதவு கண்ணாடி உடைந்தது. இ-சேவை மையத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களும் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

இ-சேவை மைய ஊழியர் கீதாவை பெண்கள் நெருக்கியதால் அவர் மயங்கி விழுந்துவிட்டார். இப்போது அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு இ-சேவை மையங்களிலும் பெண்கள் பொறுமை இழந்து வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது. மேல்முறையீடு செய்ய வரும் பெண்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் செல்போனில் வந்துள்ள குறுஞ்செய்தியை காண்பித்து விண்ணப்பித்து விட்டு செல்கின்றனர். இந்த மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த விண்ணப்பங்களை தேர்வு செய்ய அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரிக்க தேவையான ஊழியர்களை தாசில்தார் ஏற்பாடு செய்து வருகிறார். இதன் அடிப்படையில் கள ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு தகுதியான பயனாளிகள் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கிடையே மேல் முறையீடு செய்த பெண்கள், எம்.எல்.ஏ.க்களை அணுகி எனக்கு பணம் வரவில்லை. பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சிபாரிசுக்கு வந்து செல்கின்றனர். இதே போல் கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களிடமும் நிலைமையை எடுத்து கூறி ரூ.1000 பணம் கிடைக்க உதவிடுமாறு கேட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments