அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் ரமணா, கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். இதற்கிடையில் ‘ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார்.
இவர் தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’, ‘ரங்கூன்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘1947- ஆகஸ்ட் 16’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.
அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான ‘கோட்டிக்கார பயலே’ பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சீனிக்காரி’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன் ராஜா வரிகளில் சத்ய பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.