குமரி மாவட்டம் குளச்சலில் மீனவ மக்கள் பாரதிய ஜனதாவில் இணையும் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பள்ளி பாலம் அருகில் உள்ள பீச் பகுதியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என குளச்சல் சரக துணை சூப்பிரண்டு தங்கராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், பா.ஜனதா மாநில மீனவரணி செயலாளர் சகாயத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இன்று மாலை 4 மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ள இடம், போலீசார் சார்பில் அனுமதி அளிக்கப்படாத இடமாகும். அந்த இடத்தில் 10 ஆயிரம் உறுப்பினர்கள் அமரவும், வாகனங்கள் நிறுத்தவும் இடவசதி இல்லை. மேலும் கிறிஸ்தவ மீனவர்கள் மற்றும் மாற்று மதத்தை சேர்ந்த முஸ்லிம் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு விழாவிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.