13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகிறது. உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்தது.இதைதொடர்ந்து சென்னை, பெங்களூரில் தாங்கள் விளையாடும் இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் நிராகரித்து இருந்தன. இதனால் உலககோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியாகுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மும்பையில் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை அறிவிக்கிறது.