தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாததன் காரணத்தால் ஏற்பட்ட விபத்துகளால் ஏராள மான மீனவ மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, தங்களிடமும், மீன்வளத்துறை அமைச்சரிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 3 கட்டங்களாக ரூ.253 – கோடிக்கான அரசாணை பிறப்பித்து, ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் திடீரென இந்தப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. ‘ஏப்ரல்’ மாதம் முதல் கடல் சீற்றம் தொடங்கும் போது பணிகள் மேற்கொள்ள இயலாது. ஆகவே, கடல் சீற்றம் தொடங்குவதற்கு முன் இந்த பணிகளை தங்கு தடையின்றி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடை முறைப்படுத்த உடனடியாக உத்தரவிட வேண்டும்.

இரையுமன்துறை கிராமம் (மேற்கு பகுதி) மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் இரையுமன்துறை பகுதியில் தாழ்நிலை படகு இணையும் தளம் அமைக்க வேண்டும். நீரோடி முதல் இரையுமன்துறை வரையுள்ள ஏ.வி.எம். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்து ஆழப்படுத்தி, முழுமையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும். புதுக்கடை – பரசேரி மாநில நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுகுடிநீர் திட்ட காங்கிரீட் குழாய்களால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக டி.ஐ.பைப்புகளை சாலையின் ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட கிள்ளியூர் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை குறித்தும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here