அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில், மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் வந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைநடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு மற்றும் பல்வேறு ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்கள் என அமலாக்கத் துறையினர் மற்றும் வருமானவரித் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச்சூழலில், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதில், நீர்வளத் துறை தலைமை பொறியாளர், அமலாக்கத் துறை விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் படையினருடன் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சாஸ்திரி பவனில் இருந்து நேற்று காலை புறப்பட்டனர். இந்தத் தகவல்வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. காமராஜர் சாலையில் உள்ள நீர்வளத் துறை தலைமை அலுவலகத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் அமலாக்கத் துறையினர் செல்வதாக தகவல் பரவியதால், 2 இடங்களிலும் ஊடகவியலாளர்கள் கூடினர். இதையடுத்து,தலைமைச் செயலக நுழைவுவாயிலில் போலீஸார் அதிகளவில்குவிக்கப்பட்டனர்.