கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் சுமார் 1,500 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரில் வேட்பாளர் ஒருவர் டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை நாணயங்களாக கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. ராணி பென்னூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹனமந்தப்பா கப்பாரா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் டெபாசிட் தொகைக்கான ரூ.10 ஆயிரத்தை ஒரு பாத்திரத்தில் நாணயங்களாக கொண்டு சென்றிருந்தார். இதை பார்த்து முதலில் கிண்டலாக பார்த்த தேர்தல் அலுவலக ஊழியர்கள், அந்த சில்லரை காசுகளை எண்ணி முடிப்பதற்குள் திணறிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.