மத்திய சுகாதாரத்துறையினருடன் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் காணொலியில் இன்று ஆலோசனை

0
48

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் குறைந்திருந்த நிலையில் இப்போது மீண்டும் கொரோனா பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான வழிமுறைகளை அறிவித்து உள்ளது. பொது சுகாதாரத்துறையின் மரபணு பகுப்பாய்வில் தற்போது அதிகமாக பரவி வருவது எக்ஸ்பிபி மற்றும் பிஏ-2 வகை தொற்றுதான் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் இந்த வைரஸ் வேகமாக பரவுவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மற்றும் இன்புளூயன்சா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

டெல்லியில் இருந்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெறும் இந்த காணொலி ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உள்பட மருத்துவ துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். மாநிலத்தின் கொரோனா பாதிப்பு விகிதம் மற்றும் அதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் தமிழக அரசு அதிகாரிகள் விளக்கி கூறுவார்கள் என தெரிகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார். மாநில பொது சுகாதாரத்துறை வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் வகையை அறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவுகளின்படி பார்க்கும் போது தற்போது அச்சப்படும் சூழல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here