நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், துணை மேயர் மேரிபிரின்சிலதா, மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், கவுன்சிலர்கள் மீனாதேவ், அக் ஷயா கண்ணன், அய்யப்பன், உதயகுமார், ரமேஷ், அனிலா சுகுமாரன், வளர்மதி, டி.ஆர்.செல்வம், நவீன்குமார், கலா ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:- வடசேரி பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதால் தற்பொழுது உள்ள வடசேரி சந்தையில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். வியாபாரிகள் பாதிக்காத வகையில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. குப்பை கிடங்கை உடனடியாக மாற்ற வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 51-வது வார்டுக்குட் பட்ட புல்லுவிளை, மேலகாட்டு விளை பகுதியில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வரி போடுவது பெயர் மாற்றுவது தொடர்பாக பொதுமக்கள், கவுன்சிலர்கள் மனு அளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதில்லை. புரோக்கர்கள் மூலமாக வந்தால் உடனடியாக பெயர் மாற்றங்கள் வரி போடுவது போன்ற பணிகள் நடக்கின்றன. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு பெயர் மாற்றத்திற்கு கொடுத்த மனுக்கள் கூட நிலுவையில் உள்ளது. செட்டிகுளம் பகுதியில் உடனடி யாக ரவுண்டானா அமைக்க வேண்டும். தெருவிளக்குகளுக்கு பல்புகள் தட்டுப்பாடு உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு சிவன் கோவில் முன்புள்ள பழைய ஆற்றில் இருந்து நாகராஜா கோவில் அழகம்மன்கோவில் உட்பட முக்கியமான கோவில்களுக்கு புனித நீர் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். தற்பொழுது இரட்டை ெரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த புனித நீரை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்று வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதற்கு மேயர் மகேஷ் பதிலளித்து கூறியதாவது:-