தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமூளை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை செயல்படுகிறது. 84-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இப்பள்ளியில் மூன்று வகுப்பறை கட்டிடம் மட்டுமே இருந்ததால், தற்போது இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிதி முழுவதையும் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் வழங்கி உள்ளார். ஆனால் கட்டிட பணிக்கு மாணவர்களை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.மாணவர்கள் கடப்பாறை எடுத்து குழி தோண்டுவது, செங்கல் உடைப்பது, சாந்து சட்டி மூலம் மண் சுமப்பது, இரும்பு கம்பிகளுக்கு வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டிடத்திற்கு மேல் நின்று ஆபத்தான நிலையில் தண்ணீர் பிடிப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்துள்ளனர். மாணவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களை படிக்கவிடாமல் தடுத்து, கட்டிட பணிகளுக்கு பயன்படுத்துவதாக வேதனை அடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.