மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு 2-வது நாளாக இன்று பாளை தியாகராஜ நகரில் நடைபெற்றது. இதில் தலைமைகுழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் வரி வருவாயில் இருந்து 10 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்வது போதுமானதாக இல்லை. கேரளாவில் மாநில அரசின் வரி வருவாயில் 38 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்வதை போல தமிழகத்திலும் 30 சதவீதமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்திருத்தம் 74-ன் படி மாவட்ட அளவில் திட்டக்குழு அமைக்க வேண்டும். மாவட்டத்திற்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த குழு தமிழகத்தில் இல்லை. அதனை உடனடியாக அமைக்க வேண்டும். கிராமப்புற 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயர்மட்ட குழு அமைத்ததை போல நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் வழங்க வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும். நகர்ப்புறங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடத்த சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த சபை கூட்டங்கள் ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும். போராட்டங்கள் நடத்தக்கூடிய அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாநில அரசு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.